அசன்சூல்: சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தின் அசன்சூல் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கலந்துகொண்டார்.
அந்தப் பொதுக்கூட்டத்தில் ஓவைசி பேசுகையில், “நரேந்திர மோடிக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது. இருவரும் நாணயத்தின் இரு பக்கங்கள், சகோதர-சகோதரி போன்றவர்கள். இருப்பினும், தங்களின் அறிக்கைகள் மூலம் இருவரும் மக்களை முட்டாள் ஆக்குகின்றனர்” என்றார்.
மேலும், இஸ்லாமியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி எதுவும் செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து அவர் கூறுகையில், “நான் சவால் விடுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் மம்தா பானர்ஜி இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்றார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை 4 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் மே2ஆம் தேதி எண்ணப்படுகின்றன.