திருவிழா காலம் என்பதால் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கை குறுத்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கரோனா சூழல் குறித்து எட்டு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிதி ஆயோக் வி.கே. பால் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சூற்றுச்சூழல் மாசு உள்பட பல காரணிகளால் கரோனா தொற்று அதிகரித்துவருவதாக கெஜ்ரிவால் மோடியிடம் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 37,975 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91,77,841ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களாக, கரோனா எண்ணிக்கை 50,000க்கும் கீழ் பதிவானது. ஆனால், நகர்ப்புறங்களில் கரோனா பரவல் தீடிரென அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக, நகர்ப்புறங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது.