டெல்லி: நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக். 22) காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த வேலைவாய்ப்பு பெற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களுக்கான தேர்வுப் பணியை சில மாதங்களில் முடித்து, பணி நியமனக் கடிதங்களை வழங்குவது, கடந்த 8 ஆண்டுகளில் அரசு முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காட்டுகிறது.
இன்று, வேலை கலாச்சாரம் மாறி வருகிறது.அதற்கேற்ப மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய அரசின் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் சுய சான்றொப்பம் மற்றும் நேர்காணலை ரத்து செய்தல் போன்ற பாஜக ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உதவியுள்ளன. இன்று நாங்கள் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு காதி மற்றும் கிராமியத் தொழில் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.
நாட்டிலேயே முதன்முறையாக காதி மற்றும் கிராமத் தொழில்களின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்த தொழில்களில் 4 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மகளிருக்கு இதில் பெரும் பங்கு வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சுற்றுலாத் துறைகள் இரண்டிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளதால், அதற்கேற்ப அரசு அத்துறைகளில் காலிப்பணியிடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
புதிய பணி நியமனம் பெற்றவர்கள் அலுவலகங்களின் கதவுகள் வழியாக உள்ளே செல்லும்போது இந்தியாவின் கடமைப் பாதையை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் மத்திய அரசு வேலை என்பது வசதியான வாழ்க்கை என்பதுடன் இல்லாமல், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருக்கும் சாதாரண மக்களுக்குச் சரியான நேரத்தில் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு மற்றும் பொன்னான வாய்ப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளியையொட்டி பிரதமர் மோடி அயோத்தியாவுக்கு பயணம்