கரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டுகிறது. கரோனா பரவலைத் தடுத்திட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதையொட்டி பிரதமர் மோடி நேற்று (ஏப். 14) மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்று, தங்கள் மாநிலங்களில் பாதிப்பு நிலவரங்களை விவரித்தனர்.
கூட்டத்தில் பேசிய மோடி, "நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மைல்கல்லை வேகமாக எட்டிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. போதுமான அளவுக்குத் தடுப்பூசி நாடு முழுவதும் கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது.
கரோனாவுக்கு எதிரான போரில் ஆளுநர்கள் தூண்களாக இருக்க வேண்டும். கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்யும்.
மாநில அரசுகளுடன் சமூக நிறுவனங்கள் தடையின்றி ஒத்துழைப்பதை உறுதிசெய்ய ஆளுநர்கள் தீவிரமாகச் செயல்படலாம். தங்கள் சமூக நெட்வொர்க் மூலம் ஆம்புலன்ஸ், வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிகரிக்க முடியும்.
தடுப்பூசி, சிகிச்சை போன்றவை தொடர்பான செய்திகளைப் பரப்பி, ஆயுஷ் தொடர்பான பரிகாரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். கரோனாவுக்கு எதிரான போரில் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நரேந்திர மோடியும், மம்தா பானர்ஜியும் நாணயத்தின் இரு பக்கங்கள்- அசாதுதீன் ஓவைசி!