டெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களைவையில் இன்று (பிப்.8) குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், பழங்குடியின சமூகத்தின் பெருமையை திரௌபதி முர்மு உயர்த்தியுள்ளார். பட்ஜெட் மீதான அவரது தொலைநோக்கு உரையின் மூலம் எங்களுக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் வழிகாட்டி உள்ளார்.
இவரது இருப்பு நாட்டின் மகள்களுக்கும், சகோதரிகளுக்கும் ஊக்கமளிக்கிறது. அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. அவரது உரையை சில உறுப்பினர்கள் தவிர்த்தனர். ஒரு முக்கிய தலைவர் கூட குடியரசு தலைவரை அவமதித்தார். அதன் மூலம் அவர்கள் பழங்குடியின மக்களுக்கு எதிரான தங்களது வெறுப்பை வெளிப்படுத்தினர்.
100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் பெருந்தொற்று மற்றும் போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல நாடுகள் பணவீக்கம், வேலையின்மை, உணவு நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இப்படிப்பட்ட காலகட்டத்தில், உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரத்தை இந்தியா எட்டியுள்ளது. இதைக்கண்டு எந்த இந்தியன் பெருமைப்படமாட்டான்?.
இன்று, உலகம் முழுவதும் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஜி20 தலைவர் பதவிக்கான வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இது நாட்டிற்கும், 140 கோடி மக்களுக்கும் பெருமை. ஆனால், இந்த வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஊழல்களும், தீவிரவாத தாக்குதல்களும் அதிகமாக நடந்தன. ஆனால், இப்போது ஏதும் நடக்கவில்லை. நாட்டில் நல்லது நடந்தால், அவர்களுக்கு வருத்தம் அதிகரிக்கிறது. நமது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலம் நவீன யுகத்தை நோக்கி நகர்ந்து வருகிறோம். இந்தியா சிறந்த உற்பத்தி மையமாக இருக்கிறது. கரோனா காலத்தில் 150 நாடுகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் 5 ஆண்டுகளில் 1,002 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை