மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி கொல்கத்தாவில் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், "அவருக்கு பரப்புரைக்கு செல்ல நேரம் இருக்கிறது. விவசாயிகளை சந்திக்கத்தான் நேரம் இருப்பதில்லை" என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார்.
ஜார்க்காண்ட் மாநிலம் ராஞ்சியில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், "மத்திய அரசின் பொறுப்பு மக்களிடையே சகோதரத்துவத்தை பரப்புவதாகும். ஆனால், பாஜகவோ மதவாத விஷம கருத்துகளை பரப்பிவருகிறது. கடந்த 100 நாள்களாக விவசாயிகள் போராடிவருகின்றனர்.
கொல்கத்தாவுக்கு சென்று மேற்கு வங்க அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தும் மோடிக்கு டெல்லியில் உள்ள விவசாயிகளை சந்திக்க நேரமில்லை. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்க மத்திய அரசு சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்திவருகிறது" என்றார்.