குஜராத்: குஜராத் மாநிலத்தின் பரூச் மாவட்டத்தில், ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி உள்ளிட்ட மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்கள் 100 சதவீத பயனாளிகளை சென்றடைந்ததை கொண்டாடும் வகையில், நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அத்திட்டங்களின் பயனாளிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று, பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் பயனாளிகளில் ஒருவரான பார்வையற்ற மாற்றுத்திறனாளி அயூப் படேல், தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்போது அயூப் படேலுடன் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் மகள்களை படிக்க வைக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அயூப் படேல், 12-ம் வகுப்பு படிக்கும் தனது மூத்த மகள் ஆலியா மருத்துவராக விரும்புகிறார் என்று கூறினார்.
இதையடுத்து பிரதமர் "நீங்கள் ஏன் மருத்துவராக விரும்புகிறீர்கள்?" என ஆலியாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த சிறுமி ஆலியா, "எனது தந்தை பார்வையில்லாமல் சிரமப்படுவதை பார்க்கிறேன், இவரைப் போல சிரமப்படுபவர்களுக்கு சேவை புரியவே மருத்துவ துறையை தேர்வு செய்தேன்" என்று கூறி கண் கலங்கினார். இதைப் பார்த்த பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் சிறுமியின் குறிக்கோளுக்கு பாராட்டு தெரிவித்தார். அயூப் படேலும், ஆலியாவும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அயூப் படேல், "எங்களைப் போன்ற எளிய மனிதர்களிடம் பிரதமர் மோடி பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் மோடி நாட்டு மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் - உதய்பூர் சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு