சிம்லா: முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக இயக்கப்பட்டது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த அதிவேக ரயில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், இமாச்சலப்பிரதசேத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிம்லாவில் நாட்டின் 4-வது வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். உனா ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது மேம்படுத்தப்பட்டது என்றும், இது மிகவும் இலகுவாகவும், வேகமாகவும் இயங்கும் என்றும், 52 விநாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த ரயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இந்த ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த வந்தே பாரத் ரயில், இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தொழில்நுட்பமும் திறமையும் இந்தியாவின் வளர்ச்சி தூண்களாகும் - பிரதமர் மோடி