கரோனா பரவலுக்கு மத்தியில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலின முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
243 இடங்களை கொண்டிருக்கும் பிகார் சட்டப்பேரவையில் 125 இடங்களைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. தே.ஜ. கூட்டணியை எதிர்த்துப் களமிறங்கிய ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களில் வெற்றிபெற்றது.
அதைத்தொடர்ந்து, இன்று ஏழாவது முறையாக பிகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். அவருடன் பாஜகவின் தர்கிஷோர் பிரசாத், ரோனு தேவி ஆகியோர் துணை முதலமைச்சராக பதவியேற்றனர்.
பிகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாரை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், "பிகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமார்ஜிக்கு வாழ்த்துகள். அவருடன் அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பிகார் வளர்ச்சிக்கு மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, மாகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் பிகார் பொறுப்பாளருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஆர்ஜேடி மூத்தத் தலைவர் சிவானந்த் திவாரிக்கு காங்கிரஸ் பதில்...!