டெல்லி : ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை விவகாரங்கள் இணையமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பு டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் மாலை 7 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு வெளியுறவு அலுவலர்கள், “மத்திய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரக அலுவலர்களுடன் தொடர்பில் உள்ளது.
அங்கு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் தற்போது காபூல் இந்திய தூதரகம் மூடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் புதிய கண்காணிப்பு மையம் ஒன்றினை மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்காக உதவி செல்போன் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக சண்டையிட்டு வந்த தாலிபன்கள் இரு தினங்களுக்கு முன்பு அந்நாட்டை பிடித்தனர்.
அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், நிலைமையை சாதகமாக்கிக் கொண்டு தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை மீண்டும் பிடித்துள்ளது. தலைநகர் காபூல் அவர்களின் பிடியில் உள்ளது. தற்போது தாலிபன்களுக்கு பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு ஐஎஸ்ஐ உதவி செய்வதாகவும் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இதையும் படிங்க : ஆப்கானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்களை மீட்க புதிய கண்காணிப்பு மையம் உருவாக்கம்