இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக மத்திய அரசு உயர் அலுவலர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நாளை(ஏப்ரல் 23) தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி அதை ரத்து செய்துள்ளார். கரோனா தொடர்பான உயர்மட்ட ஆலோசனை நாளை மேற்கொள்ள இருப்பதாகக் கூறி பரப்புரையை ரத்து செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் நிறைவடையாத நிலையத்தில், இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது. கோவிட் இரண்டாம் அலை தீவிரம் காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னணி தலைவர்கள் தேர்தல் பொதுக்கூட்டங்களை ரத்து செய்தனர்.
முதலில் இடதுசாரி தலைவர்கள் பொதுக் கூட்டங்கள் ரத்து செய்வதாக கூறினர். பின்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பொதுக்கூட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியும் தற்போது பரப்புரையை ரத்து செய்துள்ளார்.