டெல்லி: இரண்டு நாள்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், டெல்லியில் இன்று (ஏப். 22) பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம், வர்த்தகம், உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய போரிஸ் ஜான்சன், "தான் இந்தியாவின் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், அது நல்ல பலனை தந்துள்ளது என்றும் தெரிவித்தார். சுகாதாரத் துறையில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் விவாதித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தை இருநாட்டு உறவுகளை அனைத்து வகையிலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். போர் விமானங்கள் தயாரிப்பு தொழில்நுட்பத்தை பகிர்வு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இங்கிலாந்து பிரதமர் வருகை வரலாற்று சிறப்பு மிக்கது என்று தெரிவித்தார். உக்ரைனில் உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இரு நாடுகளும் பிரச்சனைக்குத் தீர்வுகாண தூதரக ரீதியான நடவடிக்கை மற்றும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இங்கிலாந்து முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது என்றும், இங்கிலாந்து - இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த போரீஸ் ஜான்சன் நடவடிக்கை எடுத்துள்ளார்" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேசிய ஒருமைப்பாட்டில் எந்தவித சமரசமும் கூடாது - பிரதமர் மோடி