டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்கும்.
“வருகிற 21ஆம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி அளிக்க சேவை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும். இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அடுத்த இரு வாரத்தில் வெளியிடப்படும்.
100 ஆண்டுகளில் இல்லாத பெருந்தொற்று
மத்திய அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும். தடுப்பூசிக்காக மாநிலங்கள் எதையும் செலவிட வேண்டியதில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 100 ஆண்டுகளில் நவீன உலகம் இதுபோன்ற ஒரு பெருந்தொற்றை கண்டதில்லை. நாட்டில் புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்படும்” என்றார்.
தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து கூறுகையில், “தடுப்பூசிக்கு உலகெங்கும் பெரும் தேவை உள்ளது. ஆனால் உற்பத்தி மிக குறைவாக உள்ளது.
நம்மிடம் தடுப்பூசிகள் இல்லாதிருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கடந்த 50-60 ஆண்டுகளின் வரலாற்றைப் பார்த்தால், இந்தியா வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு பல தசாப்தங்களாக எடுத்துக்கொண்டது உங்களுக்குத் தெரியும்” என்றார்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி
அப்போது, “இந்தியாவில் தடுப்பூசி பணிகளை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டினார். அப்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக ஆய்வுகள் நடந்துவருகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், “நாட்டில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆக்ஸிஜன் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் ரயில்கள் விடப்பட்டன” என்றார்.
ரேஷனில் இலவசப் பொருள்கள்
மேலும், “மக்களின் தேவை கருதி பிரதான் மந்திரி காரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு தீபாவளி பண்டிகை வரை நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
- 75 விழுக்காடு தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்யும்
- மாநிலங்களில் ஜூன் 21ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும்
- தனியார் மருத்துவமனைகளுக்கு 25 விழுக்காடு தடுப்பூசி வழங்கப்படும். சேவைக் கட்டணம் ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும்.
- 18 வயதை கடந்த அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும்.
இதையும் படிங்க: மோடியை சந்திக்கும் தாக்கரே- காரணம் என்ன?