டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று(ஜூலை 20) மாலை இந்தியா வந்தார். டெல்லி வந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். பின்னர், அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து பேசினார். இருவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
இதையடுத்து டெல்லியில் இன்று (ஜூலை 21) அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கை பொருளாதார நெருக்கடி, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில், இந்தியா - இலங்கை இடையிலான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைழுத்தாகின.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அதிபராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது பல சவால்களை சந்தித்தனர். அப்போது, ஒரு நல்ல நண்பனாக இருந்து இந்தியா அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.
இந்தியா இலங்கை இடையே விமான சேவையை மேம்படுத்துவது தொடர்பாக இருநாடுகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவையை தொடங்கவும் முடிவு செய்துள்ளோம். இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை' எனும் வெளியுறவுக் கொள்கை மற்றும் சாகர் (SAGAR) கொள்கையிலும் இலங்கைக்கு முக்கிய இடம் உள்ளது.
இன்று எங்களது சந்திப்பில், இருநாட்டு உறவுகள் மற்றும் பல்வேறு சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக பேசினோம். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். அதில், மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை பரஸ்பரம் ஒப்புக் கொண்டோம். இருநாடுகளின் பாதுகாப்பு நலன்களும், வளர்ச்சியும் பின்னிப் பிணைந்துள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். யுபிஐ பேமென்ட் முறையை இலங்கையில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது இருநாடுகள் இடையே நிதிசார் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்" என்று கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இந்தியாவின் வளர்ச்சி அதன் அண்டை நாடுகளுக்கும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை... என்ன காரணம் தெரியுமா?