இந்தியாவில், கரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும், இதுவரை இல்லாத அளவாக 3.14 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் நாட்டு மக்கள் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ''கரோனாவை கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால், ஊரடங்கு தேவையில்லை.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில், படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மருந்துகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. பொருளாதாரம் பாதிக்காத வகையில், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்,'' என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி ட்விட்டரில், "கரோனாவினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து உயர்மட்ட குழுவுடன் நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளேன். இதனால், நாளை, நான் மேற்கு வங்கத்திற்கு செல்லவில்லை" என பதிவிட்டுள்ளார். இதற்கிடையே கரோனா பரவலால் அதிகம் பாதித்துள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார்.