டெல்லி : டெல்லி-ஹரியானா எல்லை பகுதியான சிங்குவில் வெள்ளிக்கிழமை (அக்.15) 32 வயதான பட்டியலின விவசாய தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார். அவரது இடக்கை மணிக்கட்டு வெட்டப்பட்டு, காவல் தடுப்பு பலகையில் தொங்கவிடப்பட்டிருந்தார்.
இது தொடர்பான காணொலிக் காட்சிகள் வெளியாகி நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில் ஸ்வாதி கோயல் மற்றும் சஞ்சிவ் நேவார் ஆகியோர் வழக்குரைஞர் சாசங்க் சேகர் ஜா மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “கோவிட்19 பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன்மூலம், தங்களின் உயிர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இடரை ஏற்படுத்திவருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க, சிங்கு எல்லையில் விவசாய கூலித் தொழிலாளி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். ஆகவே நீதிமன்றம் இதனை அவசர வழக்காக கருதி, டெல்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விதமான போராட்டங்களுக்கும் தடை விதிக்க எழுத்துப்பூர்வமாக உத்தரவிட வேண்டும்.
இந்த உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும்” என்று கோரியுள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. ஏற்கனவே விவாயிகள் போராட்டங்கள் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிங்கு எல்லையில் படுகொலை: ஒருவர் சரண்; விவசாய அமைப்பு கண்டனம்