ஜல்பைகுரி: மேற்கு வங்கத்தில் ரகசிய குறியீடு, எண்களுடன் சுற்றித் திரிந்த 3 புறாக்களை போலீசார் பிடித்து உள்ளனர். ரகசிய உளவு பார்க்கும் பணிகளுக்காக இந்த புறாக்கள் பயன்படுத்தப்பட்டதா இல்லை ஏதேனும் தாக்குதல்கள் நடத்த திட்டமிடுதல்கள் நடைபெறுகிறதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பைகுரி சாதர் அடுத்த பிரதான்பரா பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று (மார்ச் 21) காலை முதலே ஒரு புறா உடல் நலம் சரியில்லாமலும், மிகுந்த சோர்வுடனும் ஒரு மளிகை கடையில் நின்று கொண்டு இருந்ததை பார்த்து உள்ளனர். இதையடுத்து அந்த கடையின் உரிமையாளர் துலால் சர்கார், அந்த புறாவை பிடித்து உள்ளார்.
உணவு வழங்குவதற்காக புறாவை பிடித்தவருக்கு அதிர்ச்சியாக, புறாவின் காலில் மோதிரம் போன்று வளையம் இருந்து உள்ளது. அதில் பெயர் மற்றும் எண் உள்ளிட்ட குறியீடுகள் இருப்பதை அவர் கண்டு உள்ளார். அந்த வளையத்தில் எம்டி அகபர் என்ற இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவரின் விவரம் குறிப்பிடப்பட்டு இருந்து உள்ளது.
வளையத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த எம்டி அக்பர், அந்த பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்பதை கண்டறிந்த அவர், கடத்தல் வேலைகளுக்காக இந்த புறா பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் எனக் கருதி போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு புறாவை பறக்க விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசிய போலீசார் ஒருவர், தப்பிய புறாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார். மேலும் இந்த சம்பவம் முதல் முறையல்ல என்று கூறிய அவர், கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தின் பூரி பகுதியிலும் இதே போல் புறா கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.
சாம்பல் நிறத்தில் இருந்த அந்த புறாவின் கால்களில் தங்க மற்றும் வெள்ளை நிறங்களில் இரண்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததாகவும், அதில் வெள்ளை நிற ஸ்டிக்கரில் "31" என்ற எழுத்தும் கோல்டன் நிற ஸ்டிக்கரில் "ரெட்டி விஎஸ்பி டிஎன்" என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்ததாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் குறியிடப்பட்ட இரண்டு செய்திகளின் அர்த்தத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என அந்த போலீஸ் அதிகாரி தெரித்தார். முன்னதாக கடந்த மார்ச் 8 ஆம் தேதி, ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் பாரதீப் கடற்கரை பகுதியில் கேமரா மற்றும் காலில் சிப் பொருத்தப்பட்டு இருந்த மற்றொரு புறாவை மீனவர்கள் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புறாவின் தோலில் உருது மற்றும் சீன மொழிகளில் குறியீட்டு செய்திகள் எழுதப்பட்டு இருந்ததாகவும் புறா குறித்து மரைன் போலீசாரிடம் மீனவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். புறாவை கைப்பற்றிய மரைன் போலீசார் அதன் தோளில் இருந்த குறியீட்டு செய்தி, கேமரா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளவு நோக்கங்களுக்காக புறா பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறெதும் காரண என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் புறாக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேமரா, சிப் மற்றும் டேக் ஆகியவற்றை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரிக்கை!