தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினா் மருத்துவா் எஸ். செந்தில்குமார், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பேசினார். அப்போது, பெட்ரோல்- டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்த அரசு என்ன செய்யப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
விலை உயர்வை கட்டுப்படுத்துவது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், எண்ணெய் நிறுவனங்கள்தான் எரிபொருள் விலையை நிர்ணயிக்கிறது என்றும் மத்திய அரசு கூறுகிறது. ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் விலைவாசி உயர்வு இருப்பதில்லை, எண்ணெய் விலை ஒரு பீப்பாய் நூறு டாலருக்கு மேல் சென்றாலும் விலையில் ஏற்றம் இருப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.
தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இருப்பதில்லை என்பதால், ஆண்டு முழுவதும் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவைத்தலைவரிடம் தான் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார். பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்தில் இருந்து, சாமானிய மக்களை காப்பாற்றுவதற்கு இதுதான் ஒரே வழி என்றும், இல்லையன்றால் விலைவாசி கூடி விடுமோ என்ற அச்சத்திலேயே இருக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.
இப்படியே சென்றால் பெட்ரோல்- டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை, ஒரே நாளில் காலை ஒரு முறையும், மாலை ஒரு முறையும் விலை உயர்த்தப்படும் நிலை வரக்கூடும். எனவே சாமானிய மக்களை காப்பாற்ற, ஆண்டு முழுவதும் தேர்தல் நடத்த ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக எஸ்.செந்தில்குமார் தெரிவித்தார்.