லக்னோ: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறந்து, தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை பாரதிய ஜனதா கட்சியின் அயோத்தி மாவட்ட ஊடக பொறுப்பாளர் டாக்டர். ரஜீனீஷ் சிங் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குரைஞர் ருத்ர விக்ரம் சிங் கூறுகையில், “தாஜ்மஹால் தொடர்பான பழைய சர்ச்சை தற்போதுவரை தொடர்கிறது.
தாஜ்மஹாலில் உள்ள சுமார் 20 அறைகள் பூட்டப்பட்டுள்ளன, யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த அறைகளில் இந்து கடவுள்களின் சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
உண்மைகளை அறிய இந்த அறைகளை திறக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த அறைகளைத் திறந்து அனைத்து சர்ச்சைகளுக்கும் ஓய்வு கொடுப்பதில் எந்தத் தீங்கும் இல்லை” என்றார்.
மேலும், “இந்த அறைகளைத் திறக்கவும், அவற்றில் இந்துக் கடவுள்கள் மற்றும் வேதங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி லக்னோ உயர் நீதிமன்றத்தை அணுகினேன். பல வலதுசாரி அமைப்புகள் தாஜ்மஹாலை தேஜோ மஹாலயா, ஒரு இந்துக் கோவில் என்று கூறுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழங்கால ஹரியானா தாஜ்மஹால்!