டெல்லி: கரோனா காலத்தில் மக்களைத் தவிக்கவிட்டு காணாமல் போன பிரதமர் மோடி, அவ்வப்போது தொலைக்காட்சி முன் தோன்றி உருக்கமாக பேசுவது கேலிக்குரியது என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
வாரனாசி மக்களவைத் தொகுதியில் உள்ள முன்களப் பணியாளர்களிடன் பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார். அந்த உரையாடலின் சிறிய பகுதி உருக்கமானதாக அமைந்திருந்தது. அதனை வைத்து பாஜகவினர் பிரதமர் மோடியை கொண்டாடி வந்தனர்.
இவ்வேளையில், இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, "நாட்டு மக்களின் கண்ணீரை விட, பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணீர் பாஜகவினருக்கு பெரும் மதிப்பாக தெரிகிறது.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை கிடைக்காமல் அனைத்து இடங்களிலும் மரண ஓலம் கேட்கும் வேளையில், பிரதமரும் அவரைச் சார்ந்த கட்சியினரும் மாயமானது கேள்விக்குரியது. தடுப்பூசி செலுத்துவதில் அரசு காட்டிய மெத்தன போக்கு, பல உயிர்கள் மரணிக்க காரணமாக இருந்தது" என்று கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த பெருந்தொற்று காலத்தில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1600 அவசர ஊர்தி தேவைகளையும், மருத்துவமனை படுக்கைகளுக்கான ஒரு லட்சத்து 34,000 கோரிக்கைகளையும், ஆக்ஸிஜன் உருளைகளுக்கான 64,000 கோரிக்கைகளையும் காங்கிரஸ் கட்சி பூர்த்தி செய்துள்ளது என்று கூறினார்.