போபால்: மத்திய பிரதேசத்தில் பட்டியலின தம்பதி ஊர்வலம் சென்றபோது அவர்கள் மீது மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கற்களை வீசியுள்ளனர். இந்நிலையில் கற்கள் வீசியவர்களின் வீடுகளை மாவட்ட நிர்வாகம் இடித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜிராபூர் காவல்துறை தரப்பில், "ராஜ்கர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து 38 கி.மீ தொலைவில் உள்ள ஜிராபூர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் பட்டியலின தம்பதி ஊர்வலம் ஒரு மசூதிக்கு வெளியே சென்று கொண்டிருந்தது.
கொண்டாட்டத்தின் போது டிஜே மூலம் பாடல்கள் போடப்பட்டு உள்ளது. இதற்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் எதிர்த்துள்ளனர். பின்னர் ஆட்சேபனைக்குப் பிறகு, ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரம் இசையை நிறுத்தினர். ஆனால் ஊர்வலம் ஒரு கோயிலுக்கு அருகில் வந்ததும், அவர்கள் மீண்டும் இசைக்கத் தொடங்கினர்.
இதற்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், ஊர்வலத்தின் மீது கற்களை வீசத் தொடங்கியுள்ளனர். இதனால் மூன்று பேர் காயமடைந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து மணமகளின் தந்தை புகார் அளித்ததன் பேரில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் எஸ்சி-எஸ்டி பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜிராபூர் காவல் நிலையப் பொறுப்பாளர் பிரபாத் கவுர் தெரிவித்தார்.
பின்னர், காவல் துறையினரின் பாதுகாப்புடன் பட்டியலின தம்பதி ஊர்வலத்தின்போது கற்களை வீசிய 6 பேரின் வீடுகளை புல்டோசர் மூலம் மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது. விசாரணையில் ஆக்கிரமிப்பு பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை!