பெங்களூருவிலிருந்து டெல்லிக்குச் சென்ற i5-722 ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், நடுவானில் ஆடைகளைக் கழற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் அந்நபர் விமானத்திலிருந்த பணிப்பெண்ணிடம் தனக்கு இத்தாலிய முத்தம் தருமாறு கேட்டு அடம்பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விமானக் குழுவினர், அவரை அமைதியாக அமரும்படி வலியுறுத்தினர். பின்னர், அவர் மதுபானம் அல்லது போதைப் பொருள் உட்கொண்டுள்ளாரா என்றும் சோதனை நடத்தினர்.
சிறிது நேரம் கழித்து, அந்நபரை பார்வையிட பணிப்பெண் சென்றுள்ளார். அப்போது ஆடைகளைக் கழற்றிவிட்டு அந்நபர் நிர்வாணமாக இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். இதைப் பார்த்து திக்குமுக்காடிப் போன அப்பெண், உடனடியாக ஆடைகளை அணியும்படி அந்நபரிடம் அறிவுறுத்தியுள்ளார். பேச்சைக் கேட்பது போலவே ஆடைகளை அணிந்த நபர், மீண்டும் கழற்றிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, டெல்லி விமான நிலைய ஊழியர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. விமானம் டெல்லியில் தரையிறங்கியதுமே, விமான நிலைய காவல் துறையினரும் ஊழியர்களும் வந்து விசாரித்துள்ளனர். அவர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பயணி, அவர்கள் முன்னிலையிலேயே தனது லேப்டாப்பை உடைத்துவிட்டு, மீண்டும் ஆடைகளைக் கழற்றிவிட்டு போஸ் கொடுத்துள்ளார்.
இதனால் கடுப்பின் உச்சத்திற்கு சென்ற காவல் துறையினர், ஆடையை அணியுமாறு வலியுறுத்தியுள்ளனர். பின்னர், அங்கிருந்து விசாரணைக்காக பயணியை அழைத்துச் சென்றனர்.
இது குறித்து விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் கூறுகையில், "விமானத்தில் ஏறியவுடனேயே அந்நபர் லைஃப் ஜாக்கெட்டுகள் குறித்து கேபின் குழுவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கிருந்த விமானக் குழுவினரிடமும் தவறாக நடந்து கொண்டார். திடீரென அனைவர் முன்னிலையிலும் ஆடைகளைக் கழற்றிவிட்டார்" எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஏர் ஏசியா சார்பில் விமானத் துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்நபர் மீண்டும் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 'லாக் டவுனில் ரத்தான விமானங்களின் டிக்கெட் கட்டணம் 99% ரீஃபண்ட்' - ஏர்ஏசியா