டெல்லி : கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஸ்தம்பித்து காணப்படுகின்றன. சாலையை வெள்ளை போர்வை கொண்டு போர்த்தியது போல் மூடுபனி காட்சி அளிக்கின்றன. அடர்த்தியான பனி மூட்டத்தின் காரணமாக தலைநகர் டெல்லியில் விமான சேவைகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குவதில் சிரமம் நிலவி வருகிறது. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் தாமதமாகின. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து கோவா நோக்கி செல்ல இருந்த இண்டிகோ நிறுவனத்தின் 6E-2175 விமானம் மூடுபனி காரணமாக தாமதமாக இயக்கப்பட்டது.
நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்த நிலையில், மதியம் 1 மணி அளவில் விமான இயக்கம் குறித்து இண்டிகோ விமானத்தின் கேப்டன் அறிவிப்பு வழங்கி உள்ளார். கடைசி வரிசையில் அமர்ந்து இருந்த பயணி ஒருவர் திடீரென முன்னேறிச் சென்று விமானியை தாக்கத் தொடங்கினார். தொடர்ந்து அவர் தாக்குதல் நடத்திய நிலையில், சக விமானி மற்றும் சிப்பந்திகள் ஆகியோர் இருவரும் விளக்கி மற்ற பயணிகளை ஆசுவாசப்படுத்தினர்.
விமான கேப்டன் மீது பயணி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் வேகமாக பரவி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமானம் நிறுவனம் தரப்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் வீடியோவை ஆதாரமாக கொண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இண்டிகோ விமான கேப்டன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அது குறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பயணி குறித்து விசாரித்து வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : அமெரிக்க போர்க் கப்பல் மீது தாக்குதல்! போர் அடுத்த கட்டம் நகருகிறதா? அமெரிக்காவின் பதில் என்ன?