பெங்களூரு: ரஜினிகாந்த் நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான், கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இயக்கினார். மீடியா ஒன் குளோபல் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. தயாரிப்புக்காக மீடியா ஒன் குளோபல் நிறுவனம் 6 கோடியே 84 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது.
படம் நஷ்டமானால் கடனை திருப்பி செலுத்த உதவுவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனமும் லதா ரஜினிகாந்தும் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து படம் நஷ்டமான நிலையில், மீடியா ஒன் குளோபல் நிறுவனமும் லதா ரஜினிகாந்த்திடம் உதவி கேட்டுள்ளது.
ஆனால் அவர் நிதி உதவி செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து மீடியா ஒன் குளோபல் நிறுவனம் லதா ரஜினிகாந்த் மீது அளித்த புகாரின் பேரில், பெங்களூரு ஹல்சூர்கேட் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீதான மோசடி, பொய்யான வாக்குமூலம் அளித்தல், பொய்யான ஆதாரங்களைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேநேரம், போலி ஆவணத்தை கொடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையும் படிங்க:பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட பாஜக பிரமுகர் ஶ்ரீகாந்த் தியாகி கைது!