கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் ஊழல் நடந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான விசாரணையில், அம்மாநில அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி ஜூலை 23ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது நெருங்கிய தோழியான நடிகை அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீடுகளில் நடத்திய சோதனையில் 50 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் இவர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டி அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனிடையே பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி இருவரும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கொல்கத்தா நீதிமன்றத்தில் இன்று (ஆக 5) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இருவருடைய ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். அதோடு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஒரு மாதத்திற்கு இரண்டரை லட்சம் மதிப்புள்ள பழங்களை சாப்பிட்ட முன்னாள் அமைச்சர்