டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 10வது நாளான நேற்றைய முன்தினம் (டிச.13), மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தின்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த இருவர், உறுப்பினர்களின் மேஜையின் மீது தாவி ஓடினர். அப்போது, அவர்கள் கையில் வைத்திருந்த குப்பியில் இருந்து மஞ்சள் நிற வாயுவும் வெளியானது. இதனையடுத்து, இருவரையும் பிடித்த உறுப்பினர்கள், அவர்களை அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அதேநேரம், நாடாளுமன்ற வளாகத்தில் பெண் உள்பட இருவரும் குப்பிகளில் இருந்து சில நிறங்களிலான வாயுக்களை வெளியேற்றினர். பின்னர், அவர்களையும் காவல்துறையினர் பிடித்தனர். இதனையடுத்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மக்களவை செயலர், உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.
இதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினர், பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லலித் ஜா என்பது டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, லலித் ஜாவை பிடிப்பதற்கு, தொழில்நுட்ப உதவியுடன் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று (டிச.14) தானாகவே டெல்லி காவல் நிலையத்திற்கு வந்த லலித் ஜாவை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தவற்றை படம் பிடிப்பதற்காக லலித் ஜா காத்திருந்ததாகவும், பின்னர் அவர்களை போலீசார் கைது செய்ததும், ராஜஸ்தானின் குச்சமனில் தனது நண்பர் மகேஷின் அறைக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் இருவரும் முகநூல் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், தன்னுடைய சகாக்களின் மொபைல் போன்களை எரித்ததாகவும் லலித் ஜா கூறியுள்ளார். இதனை டெல்லி காவல்துறையினர் உறுதி செய்து வருகின்றனர். இதனிடையே, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மனோரஞ்சன் டி, சாகர் ஷர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே மற்றும் நீலம் தேவி ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, டெல்லியின் பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி டாக்டர் ஹர்தீப் கவுர் நேற்று அனுமதி வழங்கி உள்ளார்.
இதனையடுத்து, சம்பவத்தின் உண்மையான பின்னணியை அறிய, அவர்கள் நான்கு பேரும் மும்பை, மைசூரு மற்றும் லக்னோ ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். ஏனென்றால், சிறப்பு ஷூக்களை லக்னோவிலும், வாயுக்களை வெளிப்படுத்திய குப்பிகளை மும்பையில் இருந்தும் வாங்கி உள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், நேற்றைய முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை மீண்டும் மறுஉருவாக்கம் செய்து டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு.. பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத்..