டெல்லி: மணிப்பூரில் மெய்தீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்கள் அமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மெய்தீஸ் உள்ளிட்ட பெரும்பான்மை சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பல இடங்களில் கலவரம் வெடித்தது. வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அப்போதிலிருந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த வன்முறைகளில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தினந்தோறும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
மணிப்பூரில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த சூழலில் நேற்று (ஜூலை 19) முதல் மணிப்பூர் கலவரம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி, ஏராளமான ஆண்கள் அவர்களை ஊர்வலமாக இழுத்துச் செல்கின்றனர். இந்த வீடியோ கடந்த மே 4ஆம் தேதி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த வீடியோ குறித்து எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்கி உள்ளது. இதில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முன்னதாக நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அனைத்து எதிர்கட்சிகளும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. இக்கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத் தொடரில் 31 மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.