பானிபட்: ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த திவ்யான்ஷ் குப்தா என்பரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது வரதட்சணையாக சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், வரதட்சணை போதவில்லை எனக்கூறி, திவ்யான்ஷ் குப்தா தனது பெற்றோருடன் சேர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், திவ்யான்ஷ் குப்தாவுக்கும் அவரது மனைவிக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததை இழிவாக நினைத்த திவ்யான்ஷின் பெற்றோர், அதற்கு தண்டனையாக மருத்துவமனையிலேயே கணவனின் காலை நக்கச் செய்து, மருமகளை கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கித் தர வேண்டும் என்றும், அப்படி தரவில்லை எனில் கணவருடன் தங்க அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி சாந்தினி பாக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கணவர் திவ்யான்ஷ் குப்தா, மாமனார் நாகின் குப்தா, மாமியார் பிரமிளா மற்றும் மைத்துனர் நூபுர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை