டெல்லி: டெல்லி லஷ்மி நகரில் உள்ள ரமேஷ் பூங்காவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரை டெல்லி காவல் துறை சிறப்புப் பிரிவு அலுவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் முகமது அஷ்ரஃப் என்ற அலி எனக் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் போலியான இந்திய அடையாள அட்டையை வைத்திருந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளும், குண்டுகளும் பறிமுதல்
அவரிடமிருந்து 60 குண்டுகள் உள்ள ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கை வெடிகுண்டு, இரண்டு கைத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. தற்போது, இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், வெடிகுண்டு சட்டம், ஆயுதங்கள் சட்டம், பிற விதிகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. தற்போது அவரின் வீட்டில் காவலர்கள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
நேபாளம் வழியாக டெல்லிக்கு...
டெல்லியில் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, டெல்லி காவல் துறையினர் கடும் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மேலும், டெல்லி காவல் ஆணையர், மாவட்ட காவலர்கள், சிறப்புப் பிரிவு, குற்றப் பிரிவு காவலர்கள் ஆகியோரை எச்சரிக்கையாகப் பணியாற்ற உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சிறப்புப் பிரிவினர் சந்தேகத்துக்குரியவர்கள் மீது தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும், கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதி நேபாளம் வழியாக டெல்லி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் பண்டிகை நேரத்தில் பெரும் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தின்பேரில் காவலர்கள் விசாரணையைத் தீவிரப்படுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: வீழ்த்தப்பட்ட 3 பயங்கரவாதிகள்