ஜம்மு: உள்நாட்டுப் பிரச்னைகளை மக்களின் கவனத்திலிருந்து திசைத் திருப்பும் நோக்கில், இந்தியா உடனான எல்லைப்பகுதியில் பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு முயற்சி செய்து வருவதாக, இந்திய ராணுவ கமாண்டர் பி.எஸ். ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது தேர்தலில் வெற்றிபெற்றுள்ளவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், அம்மாநில மக்களின் மேம்பாட்டிற்காவும் பணிபுரிய வேண்டிய நேரம் இது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தஞ்சமடைந்துள்ள 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டுவருவதாக, தொடர்ந்து எங்களுக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன. கடும் குளிர் காலமாக இருந்தாலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியும், பயங்கரவாதிகள் ஊடுருவல் ஆகியவற்றின் மூலம் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.
உள்நாட்டு பிரச்னைகள் மீதான மக்களின் கவனத்தை திசைத் திருப்பும் நோக்கிலேயே இதுபோன்ற நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபடுகிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடிக்கொடுக்கும்" என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியறுத்தி, அந்நாட்டைச் சேர்ந்த 11 எதிர்க்கட்சிகள் இணைந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி, அவ்வப்போது நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ் ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!