ஐதராபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்து உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது.
மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் விளையாடுகின்றன. முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் இந்தியாவுக்கு வந்து கொண்டு உள்ளன. இதில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்தியா வந்தடைந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் அணி ஐதராபாத் வந்தடைந்தது.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் உலக கோப்பை தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுகிறது. இந்தப் போட்டி ஐதராபாத் நகரில் நடைபெறுகிறது.
தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2வது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. அக்டோபர் 5ஆம் தேதி உலக கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 6ஆம் தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக களம் காணுகிறது.
இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி இந்தியா வர விசா பிரச்சினை நிலவிய நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் விசா வழங்கப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு பஞ்சாப், பதான்கோட் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் விளையாட பாகிஸ்தானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வந்து இருந்தது. அதன் பின் பாகிஸ்தான் அணி தற்போது தான் இந்தியா வந்து உள்ளது. இந்தியா வந்து உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் விவரம் வருமாறு.
பாகிஸ்தான் : பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், பகார் ஜமான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, உசாமா மிர், ஹாரிஸ் ரவுப், முகமது நவாஸ், ஹசன் அலி, முகமது வாசிம், ஷாஹின் ஷா அப்ரிடி.
இதையும் படிங்க : இந்தியாவை திணறடித்து 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!