குஜராத்: குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் கரையோரப் பகுதியிலிருந்த 60 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்த 10 படகுகளையும் பறிமுதல்செய்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 படகுகளை பாகிஸ்தான் கடற்படையினர் பறிமுதல்செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க் கிழமையன்று, மூன்று படகுகளையும், 18 இந்திய மீனவர்களையும் பாகிஸ்தான் கடற்படையினர் சிறைபிடித்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில் மீண்டும் 60 இந்திய மீனவர்களையும், 10 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படையினர் சிறைபிடித்துள்ள செய்தி கேட்டு மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். ஒக்ஹா மற்றும் போர்பந்தர் பகுதிகளிலிருந்து பெரும்பாலும் பாகிஸ்தான் கடற்படையினர் படகுகளை கடத்திச் செல்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 படகுகளையும், 100 மீனவர்களையும் பாகிஸ்தான் கடற்படையினர் சட்டவிரோதமாக இச்செயலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த ஜனவரி 28 ஆம் தேதி, “Tulsi Maiya' எனப் பெயரிடப்பட்ட படகை பாகிஸ்தான் கடற்படையினர் கடத்திச் சென்றனர். இதேபோன்று, பிப்ரவரி ஒன்றாம் தேதி, ‘Satyavati' என்று பெயரிடப்பட்ட படகையும் கடத்திச் சென்றனர்.
ஜனவரி 31ஆம் தேதியன்று, எல்லைப் பாதுகாப்பு படையினர் லக்பட்வாரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சில பாகிஸ்தானிய மீனவர்கள் எல்லையை கடக்க முற்பட்டனர். அப்போது மூன்று படகுகளையும், ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்தவரையும் எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்தனர். பிடிக்கப்பட்ட படகில் சோதனை செய்ததில், சந்தேகத்திற்கிடமான எதுவும் படகில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிப்பு