கோட்டயம்: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ், அக்கூட்டணியில் இருந்து பிரிந்தது.
கேரள மாநிலத்தில் 1964ஆம் ஆண்டு உருவான கேரள காங்கிரஸ் கட்சி, பின் சில ஆண்டுகளில் பல்வேறு துண்டுகளாக சிதறுண்டு, தற்போது கட்சியின் தலைவர்களின் பெயரைத் தாங்கி செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக கேரள காங்கிரஸ் (ஜோசப் கே. மணி), கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (பாலகிருஷ்ண பிள்ளை), கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), கேரள காங்கிரஸ் (கே.சி.ஜோசப்), கேரள காங்கிரஸ்(பி.சி.தாமஸ்) உள்ளிட்டப் பல்வேறு அணிகளாக சிதறுண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், உரிய இட ஒதுக்கீடு தராததால், பி.சி. தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் அணியினர் வெளியேறினர். பின், அந்த அணியினர் ஜோசப் தலைமையிலான கேரள காங்கிரஸ் அணியினருடன் இணைந்தனர். இதன்மூலம் பி.சி. தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் அணியினர், தாய் அமைப்பான காங்கிரஸ் பேரியக்கத்தின்கீழ் பணியாற்றவுள்ளனர்.
இந்த இரு அணியினரும் இணைந்து செண்டை மேளம் சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்திடம் கேட்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு, கேரள மாநிலத்தில் முதன்முறையாக நாடாளுமன்றம் சென்றவர் என்ற பெருமைக்குரியவர், பி.சி.தாமஸ்.