ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தை மையாக வைத்து இயங்கும் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தற்போது பல்வேறு மாநிலங்களின் தேர்தல்களிலும் பங்கேற்று வருகிறது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கட்சி, அமமுக கூட்டணியில் மூன்று இடங்களில் தனிச்சட்டத்தில் போட்டியிட்டது.
ஹேக் செய்யப்பட்ட பின்...?
இந்நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இன்று மதியம் 1 மணியளவில் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பெயரில் இருந்த ட்விட்டர் பக்கம், புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க் பெயரில் ஹேக்கர்களால் மாற்றப்பட்டுள்ளது.
எலான் மஸ்கின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படமாகவும் மாற்றியுள்ளனர். ஆனால், ஹேக் செய்யப்பட்ட பின் புதிதாக வேறு எந்த ட்விட்டுகளும் பதிவேற்றப்படவில்லை. சற்று நேரத்திற்குப் பின்னர், ஏஐஎம்ஐஎம் கட்சியின் ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. இதுகுறித்து, ஹைதராபாத் காவல்துறையிடம் அக்கட்சித் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொடரும் ஹேக்கிங்
ஏஐஎம்ஐஎம் கட்சியின் ட்விட்டர் பக்கம் மொத்தம் 6 லட்சத்திற்கும் மேலானவர்கள் பின்பற்றுகின்றனர். இதேபோன்று, ஒன்பது நாள்களுக்கு முன்னரும் அக்கட்சியின் இதே ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, மீண்டும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'என் புகைப்படங்கள் எளியோருக்கானது': இது தானிஷ் சித்திக்குக்கான அஞ்சலி