கொல்கத்தா: இதுகுறித்து மேற்கு வங்க மாநில கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்கு வங்க மாநிலம் முழுவதும் மார்ச் 2012ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 74,717 தொடக்கப் பள்ளிகள் இருந்தன. இந்த எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் 67,699ஆக குறைந்துள்ளது. அந்த வகையில், 7,018 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அதோடு மாநிலத்தின் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக பர்கானாஸில் 1,182 பள்ளிகள், ஜார்கிராம், மேற்கு மிட்னாபூர் பகுதிகளில் 1,074 பள்ளிகள், கிழக்கு மிட்னாப்பூரில் 876 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இவை மாணவர் சேர்க்கை குறைவு, பராமரிப்பு செலவுகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்டவை காரணங்களால் மூடப்பட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆளும் கட்சியே முழு காரணம். மாநில அரசு மட்டுமே பொறுப்பு. பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பற்றி அரசுக்கு துளியும் கவலையில்லை. ஏழை குடும்பங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் பள்ளிகள் குறைந்தால், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். கல்வித் தரத்தை மேம்படுத்த மாநில அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மறுபுறம், கல்வியாளர்கள், "தொடக்கப் பள்ளிகள் மூடப்படுவது தேசிய இழப்பாகும். ஏனென்றால் நாட்டின் மிகப்பெரிய சக்தி இளம் தலைமுறையே. இவர்கள் படித்தால் மட்டுமே தேசத்தின் மதிப்புக்கூடும். முழுமையான கல்வியை உறுதி செய்வதே அரசின் முக்கிய பொறுப்பு. இதனை மாநில அரசு கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி ஈபிஎஸ் உடன் தொலைபேசியில் பேசியதாக வெளியான செய்தி தவறானது - ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு!