பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில், ஆளும் பாஜக, ஐக்கிய ஜனதா தள கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், நிதிஷ்குமார் தொடர்ந்து நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
நடைபெற்ற தேர்தலில், 7 லட்சத்து 6 ஆயிரத்து 252 பேர் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, வாக்களித்தவர்களில் 1.7 விழுக்காடு பேர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளனர். 7.3 கோடி வாக்காளர்கள் உள்ள பிகாரில் 4 கோடி வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.
2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நோட்டாவுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனியாக சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா சின்னம் கடைசியாக இடம்பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மற்ற வேட்பாளர்களின் சின்னங்களைத் தொடர்ந்து கடைசியாக நோட்டா சின்னம் இடம் பெற்று வருகிறது.
முன்னதாக, யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் 49 ஓ என்ற விண்ணப்ப படிவம் மூலம் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வந்தனர்.