நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டின் தடுப்பூசி நிலவரம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் அனுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவின் பதிலளித்துள்ளார்.
அதில், ஆரம்பக்காலத்தில் தடுப்பூசி தொடர்பாக பெண்களிடம் சில ஐயப்பாடுகள் நிலவின. கர்பினிகள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா என்ற கேள்விகள் எழுந்தன.
பின்னர், அறிவியல் தரவுகள், நிபுணர்களின் கருத்துக்களைக் கொண்டு பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், நாடு முழுவதும் மொத்தம் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளில் 48.70 விழுக்காடு தடுப்பூசிகள் பெண்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
வயது வாரியாக பார்க்கையில், 60 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 7.94 கோடி பேரும், 45 முதல் 59 வயதுக்குட்பட்ட 12.1 கோடி பேரும், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 22.56 கோடி பேரும் இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 82 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 52.53 லட்சத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆறு மாதத்தில் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி - அதர் பூனாவாலா