டெல்லி: கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்டப் பல்வேறு துறைகளில் கோலோச்சி சாதனை படைப்பவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நடப்பாண்டுக்காண பத்ம விருதுகள் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டில் 6 தமிழர்கள் உள்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இருளர் இனத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு சமூக சேவை பிரிவில் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண், மற்றும் மருத்துவ சேவைக்காக புதுச்சேரியைச் சேர்ந்த நளினி பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக சேவைக்காக பாலம் கல்யாணசுந்தரம் மற்றும் மருத்துவத்துறையில் கோபால்சாமி வேலுச்சாமி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ORS எனப்படும் உப்பு மற்றும் சர்க்கரை கரைசலை உருவாக்கிய முன்னோடியான மறைந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்க்கிற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த மருத்துவர் திலீப் கண்டுபிடித்த உப்பு மற்றும் சர்க்கரை கரைசல் காலரா, வாந்தி உள்ளிட்ட கொடிய நோய்கள் பாதித்து நீர் சத்து குறைவால் உயிரிழப்பவர்களை 93 சதவீதம் வரை குணப்படுத்தியதாகவும், இந்த உப்பு சர்க்கரை கரைசல் மூலமாக இதுவரை 5 கோடி பேர் வரை காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மறைந்த சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவ் மற்றும் தபேலா கலைஞர் ஷாகீர் ஹுசைன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 98 வயது மூத்த இயற்கை விவசாயி துலா ராம் உப்ரதி, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை மற்றும் நீதிக்காக போராடி வந்த வி.பி. அப்புகுட்டன் பொடுவால் ஆகியோர் பெயர்களும் பத்ம விருதுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இதையும் படிங்க: "அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களை நாடு மறக்காது.." - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு