கொலாசிப் (மிசோரம்): அஸ்ஸாம் மற்றும் மிசோரம் இடையே நிலவும் பிரச்னை குறித்த முக்கிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் லால்த்லாங்லியானா, ஈடிவி பாரத் மூத்த செய்தியாளர் கெளதமிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், "அஸ்ஸாம் காவல் துறையும் பொதுமக்களும், அந்தப் பக்கத்திலிருந்து எங்கள் பகுதிக்குள் நுழைந்து, இந்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் (ஐஆர்பி) இடத்தைப் பிடிக்க முயன்றனர்.
அந்த இடத்தைக் கைப்பற்றி அவர்களே முதலில் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
தற்காப்புக்காக மட்டுமே துப்பாக்கியைப் பயன்படுத்துமாறு நான் மிசோரம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தேன். ஒரு மாவட்ட ஆட்சியராக எனது குடிமக்களைப் பாதுகாப்பது என் கடமை" என்று தெரிவித்துள்ளார்.
எல்லை பிரச்னை
வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாமும், மிசோரமும் சுமார் 155 கி.மீ. எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளன. இரு மாநிலங்கள் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இதனைத் தீர்க்க இரு மாநிலங்களும் 1994ஆம் ஆண்டு முதல் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தின. எனினும் இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
அஸ்ஸாமில் தற்போது பாஜகவும், மிசோரமில் அதன் கூட்டணிக் கட்சியுமான மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகின்றன. இச்சூழலில், ஜூலை 26ஆம் தேதி மிசோரம் மாநில நிர்வாகம் எல்லையில் 6.5 கி.மீ பகுதியை ஆக்கிரமித்ததாக, அஸ்ஸாமின் சச்சார் மாவட்ட அலுவலர்கள் எல்லைக்கு வந்தனர்.
இதற்கு மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் மாவட்ட அலுவலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு மாநில மக்களும் காவல் துறையினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அஸ்ஸாம் காவல் துறை எல்லை மாவட்ட ஆட்சியர் லால்த்லாங்லியானா மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசின் அறிவுறுத்தலின் பேரில் மிசோரம் காவல் துறையும், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அஸ்ஸாம் காவல் அலுவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமையின் மையப்புள்ளி டெல்லி- காங்கிரஸ் கடும் தாக்கு!