டெல்லி: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மதிப்பெண் திட்டத்தில் திருப்தி இல்லாத, நேரடித் தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்களுக்கு ஆக.,15 - செப்.,15 தேதிக்குள் தேர்வு நடத்தப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிருப்தி மாணவர்களுக்கு, நேரடித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதில் அளித்து சிபிஎஸ்இ வாரியம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் கணக்கிடுவது தொடர்பான மாணவர்களின் குழப்பத்திற்கு, சிபிஎஸ்இ ஒரு குழுவை அமைத்து அந்த குழு ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியீடும் எனத் தெரிவித்தது. மாணவர்களுக்கு 2019- 2020ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு கொள்கைபடி மதிப்பெண் வழங்கப்படும்.
இந்த தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிபதி ஏ.எம் கான்வில்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொற்றோர் சங்கம் ஒன்று, தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்றும், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ கொள்கைகளில் ஒற்றுமை இருக்கவேண்டும் என வாதிட்டது.
அவர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்த இரண்டு வாரியங்களின் திட்டங்களில் வித்தியாசம் இருக்கின்றது. ஆசிரியர்களால்கூட அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மாணவர்களின் செயல்திறன்களை முறையாக ஆவணப்படுத்தாத பள்ளிகளில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
ஐ.சி.எஸ்.இ மற்றும் சி.பி.எஸ்.இ ஆகியவைகளுக்கு இடையில் வேறுபாடு உள்ளது என ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பீடு செய்யக்கூடாது என தெரிவித்தது.
மாநில தேர்வு வாரியங்களின் வழக்கில், அசாம் பஞ்சாப் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வாரியத்தேர்வுகள் தொடர்பான மனுக்கள் திங்கள்கிழமை விசாரிக்கப்படும்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ +2 தேர்வு நாளை விசாரணை!