இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில், ”பெங்களூருவில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய அம்மையார் திருமதி.சசிகலா நடராஜன் அவர்கள், பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மனநிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அதற்கு கீழே அடைப்புக்குறியில், “இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல; என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், அவரையும் அவரது குடும்பத்தாரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவிற்கு பங்கு இருக்கிறது என்றும், எனவே அம்மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பின்னாளில் அவர் அதிமுகவில் இணைந்தார். ஆனால், அதற்கு பின்னர் சசிகலா குறித்து பேசுவதை அவர் தவிர்த்தே வந்தார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில், சசிகலாவால் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியே அவரை விமர்சிக்க தொடங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் மவுனம் காத்து வருவது கவனிக்கத்தக்கது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், சசிகலாவிற்கு உடல்நலம் வேண்டி முகநூலில் பதிவிட்டிருப்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முழு பாஜகவாக திமுக மாறி நிற்கிறது! - ஸ்டாலினை விமர்சித்த சீமான்!