டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது. எனவே இந்த தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில், கடந்த ஜனவரி 29ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ‘அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த இடையீட்டு மனு தொடர்பாக, தேர்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பு 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், இடையீட்டு மனு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது.
இபிஎஸ்சின் இடையீட்டு மனு, நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பிரதிநிதி என்ற அடிப்படையில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கு உரிமை இல்லை. எனவே, எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பில் கே.எஸ்.தென்னரசு மற்றும் ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிலும், பாஜக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம்: இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு!