பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏவும், கர்நாடக அமைச்சருமான ரமேஷ் ஜர்கிஹோலி கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலியல் புகார் ஒன்றில் சிக்கினார். இது தொடர்பான காணொலியை சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வெளியிட்டிருந்தார்.
இவ்விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரமேஷ் ஜர்கிஹோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர்மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான புகார்களைச் சிலர் வேண்டுமென்று கூறுவதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞர் எம்.வி. நாகராஜ் புகார் ஒன்றையும் அளித்தார். இவ்வழக்கை விசாரித்துவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்திவருகிறது. அமைச்சருக்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள சிடி ஆதாரத்தில் உள்ள குரல் மாதிரிகளைச் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் கையில் சிடி-யுடன் எழுந்துநின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ண பைரேகவுடா, பிரியங்க் கார்கே உள்பட பலர் மாநில அரசை 'சிடி அரசு' என விமர்சிக்கத் தொடங்கினர்.
சபாநாயகர் ககேரியின் வேண்டுகோளுக்குக் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதிலளிக்காததால், அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் அமைச்சர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: ’போட்டோல இருக்கறது நான்தான், ஆனா எனக்கு வீடு தரல’ - அவாஸ் யோஜனா விளம்பரத்தில் இடம்பெற்ற பெண் மறுப்பு