டெல்லி : மணிப்பூர் விவாகரம் குறித்து பேசாமல் பிரதமர் மோடி அமைச்சர்களின் பின்னல் மறைந்து கொள்வதாகவும், நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை அவமதிப்பதாகவும் கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரச் சம்பவங்கள் மற்றும் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை அமைதியான முறையில் நடத்துவதில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி மணிப்பூர் விவகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பிரதமர் மோடி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என முறையிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை (ஆகஸ்ட். 2) நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே இன்று (ஆகஸ்ட். 1) வழக்கம் போல் நாடாளுமன்ற காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியது முதலே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக சபையின் விதி 267-ன் கீழ் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்த 60 நோட்டீஸ்களை மாநிங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார். அதற்கு பதிலாக மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் குறித்து சபையின் 176வது விதியின் கீழ் விவாதம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து சபாநாயகர் ஜெகதீப் தன்கர் அவையை ஒத்திவைத்தார். அதேபோல் மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் தொடர் அமளியை அடுத்து அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : Haryana violence : ஹரியானா வன்முறையில் உயிரிழப்பு ஐந்தாக உயர்வு, நுஹ் பகுதியில் ஊரடங்கு உத்தரவு