நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, மூன்று வேளாண் சட்டங்கள், பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவந்தனர். இதனால், நாடாளுமன்றம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் ஆகஸ்ட் 3 காலை உணவு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
போராட்டக்களத்திற்குச் செல்லும் ராகுல்
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 6) பிற்பகல் 12.30 மணியளவில், எதிர்க்கட்சிகள், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரும் விவசாயிகளின் கோரிக்கையை ஆதரிக்கும்விதமாக, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜந்தர் மந்தர் பகுதிக்கு நாடாளுமன்றத்திலிருந்து பேரணியாகச் சென்று சந்திக்கவுள்ளதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதில் காங்கிரஸ், திமுக, திருணமூல் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் விவசாயிகளைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: போலி பத்திரம் மூலம் பல கோடி ரூபாய் சொத்துகள் அபகரிப்பு - நாராயணசாமி குற்றச்சாட்டு