பாட்னா: வருகிற 2024 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில், நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒருங்கிணைத்து உள்ளனர்.
இந்த நிலையில், பிகார் மாநிலத்தின் பாட்னாவில் இந்த எதிர்கட்சிகள் கூட்டம் இன்று (ஜூன் 23) நடைபெறுகிறது. இந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நேற்று முதலே முக்கிய அரசியல் பிரமுகர்கள் பாட்னாவில் முகாமிடத் தொடங்கினர்.
முக்கியமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் பாட்னா புறப்பட்டுச் சென்றார். அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை நிதீஷ்குமார் வரவேற்றார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சரத் பவார் புறப்பட்டுச் சென்றுள்ளார். முன்னதாக, முக்கியமான எதிர்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழலால், இரண்டு முறை இந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், நிதீஷ் குமாரின் தீவிர முயற்சியால் தற்போது இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு நடைபெற உள்ள எதிர்கட்சிகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள விஷயங்கள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான நடவடிக்கையை பல்வேறு விதங்களில் எடுப்பதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
ஆனால், இமாச்சலப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ் எடுத்துள்ள அரசியல் வியூகங்கள் கூட்டத்தில் பிரதிபலிக்கும் என மற்ற கட்சியினர் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும், டெல்லியில் நிர்வாக அதிகாரத்தைப் பிரிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால், ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காது எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன் காங்கிரஸ் ஒத்துழைத்தால், காங்கிரஸ் கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் தனது ஆதரவை அளிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக - காங்கிரஸ் இடையே ஒரு சமமான உறவை பின்பற்றுவதற்கு முடிவெடுத்து, இன்று நடைபெற உள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி பங்கேற்காது என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவெடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தா பானர்ஜி, ஸ்டாலின் பங்கேற்பு... மிரட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்!