பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் தலைமையில் நேற்று (ஜுலை 17) நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டணியான மகாகத்பந்தன் இரண்டாவது கூட்டத்தில் 24 கட்சிகளைச் சேர்ந்த 46க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்கான முக்கிய கூட்டம், இன்று (ஜூலை 18) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஆறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் மற்றும் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, வைகோ, மெகபூபா முப்தி உள்ளிட்ட 46 தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடக்கவுரை ஆற்றுகிறார். காலை 11.10 மணி முதல் நடைபெறும் கூட்டத்தில் ஆறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் எனவும், கூட்டத்தில் 6 அம்சங்கள் குறித்து நீண்ட விவாதம் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர், மதியம் 1 மணிக்கு உணவு இடைவேளை எடுக்கப்படுகிறது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கூட்டம் தொடரும். பிற்பகல் 2.30 மணிக்கு துணைக் குழுக்கள் அமைக்கப்படும். இந்த கூட்டணியின் செயலாளர் தேர்வு செய்யப்பட்டு, கூட்டம் பிற்பகல் 3 மணி அளவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்க துணைக் குழுக்களை அமைப்பது குறித்து விவாதம் நடத்தப்படும். இந்த துணைக்குழுக்கள்தான் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான எதிர்கட்சி கூட்டணிகளின் பாலமாக செயல்படும். துணைக் குழுக்கள், கூட்டணி வளர்ச்சிகள் குறித்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
கூட்டணியின் செயல் திட்டங்களை திட்டமிடுவதற்கான உப குழுவை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் மாபெரும் பேரணிகளை எங்கு நடத்துவது, மத்திய அரசுக்கு எதிராக பொதுப் போராட்டங்களை நடத்துவது போன்றவற்றை இந்தக் குழு நிர்வகிக்க உள்ளது.
ஆறு முக்கிய விஷயங்கள்:
- எதிர்கட்சி கூட்டணிக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்படும். மாநிலத்தில் எந்த கட்சி வலுவாக இருக்கிறதோ, அந்த கட்சிக்கு அதிக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
- இந்த நிகழ்ச்சியில், அந்தந்த மாநில அரசியல் நிலவரம் குறித்து தலைவர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாள்வது தொடர்பான பிரச்னைகள் குறித்தும் விவாதம் நடைபெறும். விவாதத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையத்திடம் சில ஆலோசனைகள் வழங்கப்படும்.
- எதிர்கட்சிகளின் கூட்டணியின் பெயரும் விவாதிக்கப்படும்.
- அனைவரும் ஒப்புக்கொண்ட பெயர் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
- கூட்டணியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார்.
தொடர்ந்து, மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டணியின் முக்கியத் தலைவர்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளனர்.
இதையும் படிங்க: Oommen Chandy: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்