காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் இன்று காலை அறிவித்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, நமச்சிவாயம் தனது வில்லியனூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அதுதொடர்பான கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்துவிடம் நேரில் வழங்கினார். அப்போது அவருடன் சேர்ந்து தீப்பாய்ந்தானும் தனது ஊசுடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நமச்சிவாயம், “புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாததை தொடர்ந்து பதவிகளை இருவரும் ராஜினாமா செய்துள்ளோம். மக்கள் மீதான சிந்தனை இல்லாதது குறித்து கட்சித் தலைமை மற்றும் முதலமைச்சரிடம் பலமுறை முறையிட்டும் கேட்காத காரணத்தால் இம்முடிவை எடுத்துள்ளோம்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் பேசி முடிவு செய்வோம். கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டேன்” என்றார்.
அடுத்தடுத்து நடக்கும் அதிரடி நிகழ்வுகளால் புதுச்சேரி மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரசிலிருந்து நீக்கம்!