பெங்களூரு (கர்நாடகா): மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகரான வி.கே.குருசாமி, கடந்த செப்டம்பர் 4 அன்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், குருசாமியை ஆயுதங்களால் கடுமையாக தாக்கிவிட்டு, அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து, குருசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, இது தொடர்பாக பனாஸ்வதி ஏசிபியின் தலைமையின் கீழான சிறப்புக் குழு தமிழ்நாட்டின் மதுரை மற்றும் தருமபுரி ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில், மதுரையில் இருந்து பிரசன்னா என்ற நபரை சிறப்பு காவல் குழுவினர் கைது செய்து உள்ளனர். இதனையடுத்து, அவர் மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு தமிழ்நாடு காவல் துறையினரால் கொண்டு வரப்பட்டு உள்ளார். மேலும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வி.கே.குருசாமி மீதான தாக்குதலுக்கு முன்பகை காரணமா? மதுரை மாவட்டம் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர், திமுக பிரமுகர் வி.கே.குருசாமி. இவர் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவராகவும், கிளைச் செயலராகவும் இருந்து உள்ளார். அதேபோல், இதே பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் மறைந்த ராஜபாண்டி.
கடந்த 2001ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போஸ்டர் ஒட்டியதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தொடங்கிய இந்த பிரச்னை இன்னும் முடியவில்லை. ஏனென்றால், இந்த இரு குடும்பத்தினர் இடையே உள்ள முன்பகை காரணமாக பழிக்குப் பழி வாங்கும் சம்பவமாக இதுவரை 15க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் மதுரையில் அரங்கேறி உள்ளன.
மேலும், இது உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கூட இது போன்ற ஒரு கொலைச்சம்பவம் தொடர்பாக வி.கே.குருசாமி மீது குற்றம்சாட்டி வழக்கும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வி.கே.குருசாமி மற்றும் அவரது நண்பர்களால் முன் விரோதம் மற்றும் அரசியல் காரணமாகவே இந்தக் கொலைகள் பலவும் நடைபெற்று உள்ளன.
எனவே, இவற்றை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறையினர் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டனர். இவற்றின் பலனாக அண்மைக் காலமாக இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில்தான், இந்த தாக்குதல் சம்பவம் பெங்களூருவில் அரங்கேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யார் இந்த வி.கே.குருசாமி? குருசாமிக்கும், ராஜபாண்டிக்கும் இடையே உள்ள பிரச்சினை என்ன?