ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் பத்து வருடம் சிறை தண்டனை பெற்றிருந்த ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா விடுதலை ஆகியுள்ளார். கோவிட்-19 தொற்றை காரணம் காட்டி பரோலில் வெளியே வந்துள்ள அவர், ஆறு மாதத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நன்னடத்தை காரணமாக விடுதலை
தண்டனை காலமான பத்து வருடத்தில் ஒன்பது வருடம் ஆறு மாதத்தை அவர் அனுபவித்துள்ள நிலையில், நன்னடத்தையை கருத்தில் கொண்டு டெல்லி அரசு ஆறு மாதம் முன்னதாகவே விடுதலை செய்துள்ளது. விடுதலை தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டதாக டெல்லி திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் நியமன ஊழல்
2000ஆவது ஆண்டில் 3,206 ஆசிரியர்களை முறைகேடாக நியமித்த ஊழல் வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா, மேலும் 53 பேர் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்பளித்தது. 86 வயதான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானா மாநில முதலமைச்சராக நான்கு முறை பதவி வகித்துள்ளார்.
ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனும் ஜே.ஜே.பி. கட்சி தலைவருமான துஷ்யந்த் சவுதாலா தற்போது ஹரியானா மாநிலத்தின் துணை முதலமைச்சராக உள்ளார்.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் விளையும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம்!